நாசா விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் : சுபான்ஷு சுக்லா சாதனை..!

 
1 1

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் – 9 ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் நண்பகல் 12.01 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார்கள். 28 மணி நேர பயணத்திற்கு பின் பால்கன் -9 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது.  

4 விண்வெளி வீரர்களும் அங்கு 14 நாட்​கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இதில் 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். விண்வெளியில் சுக்லா 7 வித ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார். பிராணவாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள், பயிர்கள் வளர்ச்சி பற்றிய ஆய்வில் சுக்லா ஈடுபட உள்ளார்.

ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது சுபான்ஷு சுக்லா, அங்கிருந்து பிரதமர் மோடி, பள்ளி குழந்தைகள் மற்றும் பிறருடன் கலந்துரையாடுகிறார்.

அமெரிக்காவின், ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து இப்பணியை மேற்கொண்டது. இதில் விண்வெளி வீரர்கள் 4 பேர் அடங்கிய குழு செல்ல திட்டமிடப்பட்டது. நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான, ஆக்சியமின் மனித விண்கல பயண திட்ட இயக்குநர் பெக்கி விட்சன் திட்ட தலைவராகவும், இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, போலந்து நாட்டை சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி மற்றும் அங்கேரி நாட்டை சேர்ந்த திபோர் கபு ஆகிய 3 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல தேர்வாகியிருந்தனர்.

ஆனால் இந்த ஆக்சியம் – 4 திட்டமிட்டபடி செயல்படுத்த இயலவில்லை. வானிலை, ஆக்சிஜன் கசிவு போன்றவற்றால் 6 முறை விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது.

இந்த சூழலில் நேற்று வானிலை 90 சதவீதம் சாதக நிலையில் இருந்ததால் விண்வெளி பயணம் தடையின்றி மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் விண்கலத்தில் அமர்ந்தனர். இதுபற்றிய புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டது.

இதனையடுத்து நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்–9 ராக்கெட் மூலம் இந்திய நேரத்தின்படி நேற்று மதியம் 12.01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் சீறி பாய்ந்தது. இதில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது.

பால்கன்–9 ராக்கெட் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39 ஏ-விலிருந்து புறப்பட்டது. இது 1969ம் ஆண்டு அப்பல்லோ 11ல் நிலவுக்குச் செல்வதற்காக நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற அதே இடத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

28 மணிநேர பயணம்

28 மணிநேர பயணத்திற்கு பிறகு, (26–ந்தேதி) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைந்து உள்ளது.

சுபான்ஷு சுக்லா

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2024ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக இந்த விண்வெளி பயணத்தை சுக்லா மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1984–ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.