சிலம்பொலி செல்லப்பன் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்!!

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச்சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.9.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலியார் நகரில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச்சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

tn

தமிழ்நாடு எங்கும் சுற்றிச் சுழன்று, சிலப்பதிகாரத்தின் மாண்பினையும் செந்தமிழின் மேன்மையையும் திறம்பட முழங்கி வருபவர் என்றும்,சீரிய செயல் புரியும் நண்பர் என்றும்,இளங்கோவடிகளின் செந்தமிழ்க் காப்பியத்தில் மூழ்கித் திளைத்தவர் என்றும், முத்துக்குளித்து அதில் நல்ல சிப்பிகளை மேலே கொண்டு வந்து கருத்தோவியம் படைத்தவர் என்றும், தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்தான், சிலம்பொலியார் அவர்கள். எப்போது பார்த்தாலும் முகம் மலர்ந்த சிரிப்புடன் இருக்கும் சிலம்பொலியாரைச் சிலையாகப் பார்க்கும்போதும், நேரில் பார்ப்பதைப் போன்றே இருக்கிறது! சிலம்பொலியார் எழுதிய 'சிலம்பொலி' என்ற புத்தகத்தை 1975-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் சென்னையில் வெளியிட்டார். “எல்லோரும் ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுவார்கள். செல்லப்பன்தான் 'சிலம்பொலி' என்ற பட்டத்தைப் பெற்ற பிறகு, ஆராய்ச்சி நூலை வெளியிட்டு இருக்கிறார்” என்று சொன்னார் கலைஞர் அவர்கள். அன்று, சிலம்பொலி புத்தகத்தை வெளியிட்டவர் கலைஞர் அவர்கள். இன்று, சிலம்பொலியார் சிலையை நான் திறந்து வைக்கிறேன். இது எனக்குக் கிடைத்த பெருமை!

எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து வாழ்நாளெல்லாம் தமிழை விளைவித்த, 'தமிழ் உழவர்'தான் நம்முடைய சிலம்பொலியார் அவர்கள். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி பள்ளித் தலைமை ஆசிரியர் -மாவட்டக் கல்வி அலுவலர் தமிழ் வளர்ச்சி இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என வளர்ந்தார். கல்லூரியில் B.A., கணக்கு பாடம் படித்தாலும், இவர் தமிழ்ப் பற்றாளராக வளர்வதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார். தலைவர் கலைஞர் ஆகியோரின் உரைகளைக் கல்லூரிக் காலத்தில் கேட்டு உணர்ச்சி பெற்றார்.குறிப்பாக, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகள்தான். இவரது தமிழ் ஒலிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் 'இந்தி இந்நாட்டுக்கு பொதுமொழியாக இருக்கலாமா?' என்ற விவாதத்தில் கலந்து, 'இருக்கக் கூடாது' என்று பேசினார். கல்லூரி படிப்பைப் பற்றி கவலைப்படாமல் இத்தகைய உணர்ச்சியைப் பதிவு செய்தார்.ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி மாவட்டக் கல்வி அலுவலராக உயர்ந்தார் சிலம்பொலியார் அவர்கள். 1967-ஆம் ஆண்டு கழக ஆட்சி அமைந்தபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார். அப்போது மாநாட்டுத் தனி அலுவலராக சிலம்பொலியார் அவர்களைத்தான் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் நியமித்தார். உலகத் தமிழ் மாநாட்டு மலரை உருவாக்கும் பொறுப்பும் அவருக்குத்தான் தரப்பட்டது.

tn

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இவர் பணியாற்றிய போது, இயக்குநர் பதவிக்கு இவர் விண்ணப்பிக்கவில்லை. "ஏன் விண்ணப்பிக்கவில்லை" என்று கேட்டவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 1976-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது, சிலம்பொலியாரைப் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொறுப்பில் இருந்து தகுதி இறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்கியது அன்றைய கவர்னர் ஆட்சி. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் இப்படித்தான் நிர்வாகம் தெரியாமல் நடந்துள்ளது. 1989-ஆம் ஆண்டு கழக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நியமித்தார்.
-
பள்ளி ஆசிரியராக இருந்தாலும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்தாலும் தமிழ்நாட்டு மேடைகளில் சிலம்பொலிக்காமல் இருந்தது இல்லை செல்லப்பனார். பழங்காலப் புலவர்களைப் போலவே சிலம்பொலியாரிடம் அணிந்துரை வாங்குவது, தங்களது நூலுக்கு மகுடம் எனக் கருதி தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வாங்குவார்கள். தமிழ் இனிமையான மொழி என்பதை அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும் போது உணரலாம். புரட்சிக் கவிஞரின் கவிதைகளை அவர் சொல்லும் போது உணர்ச்சி கொப்பளிக்கும். இத்தகைய பெருமைக்குரிய தமிழ் அடையாளமாக விளங்கும் சிலம்பொலியார் அவர்களுக்குச் சிலை அமைப்பது மிக மிக மகிழ்ச்சிக்குரியது. அதனை திறந்து வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய விழாக் குழுவினர்க்கும் சிலம்பொலியார் குடும்பத்தினர்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.