இன்று இந்தியா வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் வோங்..!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (செப் 02) இந்தியா வருகிறார். அவர் 3 நாட்கள் இந்தியாவில் தங்குகிறார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருகிறார். அவர் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவையொட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்திக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். மத்திய அமைச்சர் நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல தலைவர்களை சிங்கப்பூர் பிரதமர் வோங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றபின் திரு வோங் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் உலக அரசியலின் முக்கியத் தருணத்தில் நடைபெறுகிறது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசதந்திர நட்புறவு தொடங்கி 60 ஆண்டுகள் ஆன நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இது கருதப்படுகிறது.


