பாலியல் வழக்கில் சிக்கிய சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற என்.சி.சி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 12 வயதான 8ம் வகுப்பு பயிலும் சிறுமியை அதிகாலை மூன்று மணியளவில் பயிற்சியாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த மாணவி இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வரிடம் கூறிய போது, இதை பெரிது படுத்த வேண்டாம் எனக்கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இவ்விவகாரத்தில், போலி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நாம்தமிழர் கட்சியைச் சார்ந்த சிவா என்கிற சிவராமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிவராமன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி வழக்கில் சிக்கிய நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முகாம் நடத்தி 14 வயது சிறுமியை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவராமன் மீது இதுவரை 2 போக்சோ வழக்குகள் மற்றும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சிவராமனை கோவையில் போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார், தலைமறைவாக இருந்த போதே அதாவது 19 ஆம் தேதி சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 16,18 ஆம் தேதிகளிலேயே அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ சோதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது சிவராமன் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.