இன்று ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய 6 மாற்றங்கள்..!

 
1 1

2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி அடுக்குகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதில், வருடம் ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வரிவிலக்கு பெறுவார்கள். இதற்காக, ₹75,000 நிலையான விலக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், ₹12.75 லட்சம் வருமானம் வரை பெறும் ஒருவரும் வரிவிலக்கு பெற வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய வருமான வரி விதி நடுத்தர வகுப்பிற்கு பெரிய நன்மை அளிக்கும் வகையில் உள்ளது. இது ஒட்டுமொத்தமாக அதிக வரி செலுத்தும் சுமையை குறைக்கும் ஒரு முக்கியமான முடிவாகும். இதனால், பல தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அதிகளவில் நிவாரணம் கிடைக்கும். இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒரு புதிய UPI விதியை அமல்படுத்தியுள்ளது. இது, செயலற்ற எண்களிலிருந்து (Inactive Mobile Numbers) இனி UPI பரிவர்த்தனைகள் நடக்காது என்பதை உறுதி செய்கிறது. இதன் முக்கிய காரணம், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் (Telecom Operators) செயலற்ற எண்ணை மீண்டும் புதிய பயனர்களுக்கு ஒதுக்குவதால், பழைய கணக்குகளில் தானாகவே தவறான பரிவர்த்தனைகள் நடைபெறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. இந்த மாற்றத்தால், பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை புதுப்பிக்க வேண்டும் மற்றும் UPI கணக்குகளின் செயல்பாட்டை பரிசோதிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரிவாட்ஸ் புள்ளிகள் மற்றும் சலுகைகளில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. SBI Simply CLICK மற்றும் Air India SBI Platinum கிரெடிட் கார்டுகளின் ரிவாட்ஸ் புள்ளிகளின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Axis வங்கி , Air India இணைப்பு, Vistara கிரெடிட் கார்டு நன்மைகளில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால், கிரெடிட் கார்டு பயனர்கள் புதிய விதிகளை கவனமாக வாசித்து, அவர்களின் செலவின முறைகளை மாறுபடுத்திக்கொள்ள வேண்டும்.

2024 ஆகஸ்ட் மாதம் அறிமுகமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme - UPS), ஏப்ரல் 1, 2025 முதல் முழுமையாக செயல்படுத்தப்படும். இந்த திட்டம் பழைய ஓய்வூதிய முறையை மாற்றி, சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், அவர்கள் கடைசி 12 மாத சராசரி அடிப்படை சம்பளத்தின் 50% அளவுக்கு ஓய்வூதியம் பெறுவர். இது அரசுப் பணியாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தைக் கூடுதல் நிலைத்தன்மையுடன் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டமைப்பிலும் பாதுகாப்பு அம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மல்டி-ஃபேக்டர் அங்கீகாரம் (MFA), ஜிஎஸ்டி போர்ட்டலை அணுகும் வரி செலுத்துவோர், இனிமேல் OTP அல்லது Biometric அடையாளத்துடன் தங்களது கணக்குகளை பாதுகாக்க வேண்டும். இனி 180 நாட்களுக்கு மேல் பழைய அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே EWB உருவாக்க அனுமதி வழங்கப்படும். இந்த மாற்றங்கள், GST மோசடிகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும்.

முக்கிய வங்கிகள், SBI, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி உள்ளிட்டவைகள், வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தேவைகளை புதுப்பிக்க உள்ளன. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறினால், வாடிக்கையாளர்கள் புதிய அபராதங்களுக்கு உள்ளாகலாம். வங்கியின் மாற்றங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து, தங்கள் கணக்குகளில் தேவையான பணத்தை பராமரிக்க வேண்டும்.

இந்த விதிகள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தனிநபர்களும் வணிகங்களும் தங்களது நிதி மேலாண்மையை புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் சிறப்பு முதலீட்டு நிதியம் (Special Investment Fund) என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக செபி கூறியுள்ளது. இது மியூச்சுவல் ஃபண்டு மற்றும் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட் சர்வீஸ்க்கு இடைப்பட்டதாக உள்ளது. இதனை பயன்படுத்த குறைந்த பட்சம் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை மேலாண்மை செய்துள்ள அனுபவம் பெற்ற நிறுவனங்கள் இந்த SIF திட்டத்தை தொடங்க அனுமதி அளிக்கப்படும்.

சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (AMC) புதிய நிதிச் சலுகை (NFO) மூலம் பெறப்படும் பணத்தை 30 நாட்களுக்குள் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் முதலீட்டாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் தங்கள் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக இந்த அவகாசம் 60 நாட்களாக இருந்தது.

இது மட்டுமின்றி சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வெகுமதி புள்ளிகள் (Reward Points) அளிப்பதிலும் சில மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகின்றன.