பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு.. ஓடும் ரயிலில் மன்னிப்பு கேட்க வைத்த நாராயணன் திருப்பதி..

 
narayanan thirupathi

சேலத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது, ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாகவும், அவரை மன்னிப்புக் கேட்க வைத்ததாகவும் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் நாராயணண் திருப்பதி   தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “தற்போது சென்னை-கோவை சதாப்தி விரைவு ரயிலில் சேலம் சென்று கொண்டிருக்கிறேன். காட்பாடிக்கு முன், பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசியதையடுத்து நான் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தேன். தான்  மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்தவன் என்றும் பிரதமரை அப்படித்தான் பேசுவேன் என்றும் தன்னை கேட்க யாராலும் முடியாது என்றும் கூறி என்னையும் ஒருமையில் பேசியதையடுத்து ரயில் பரிசோதகரிடம் புகார் அளித்து விட்டு, வேலூர் மாவட்ட தலைவர் மனோகருக்கு தகவல் அளித்தேன்.

நாராயணன் திருப்பதி

காட்பாடி ரயில் நிலையத்திற்கு காவ‌ல்துறை‌யின‌ருடன் மனோகர் வந்தார். காவல் துறையினர் அனைத்து பயணிகளிடமும் விசாரித்து உறுதி செய்த பின்னர், அந்த நபர் (சாமுவேல்ராஜ்) பயணிகளின் முன்னால் பிரதமரை  தரக்குறைவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.  பொதுமக்கள் பலரும் பிரதமர் குறி்த்து தரக்குறைவாக பேசிய நபரை கண்டித்தது தமிழகம் மாற்றத்தை நோக்கி செல்கிறது. என்பதை உணர்த்தியது. விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கும், வேகமாக செயல்பட்ட வேலூர்  பாஜக மாவட்ட  தலைவர் மனோகரன் அவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றி. கம்யூனிஸ்டுகளின் அராஜகத்தை வெளிப்படுத்தும்  என் பயணம்  தொடர்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.