ஒரே மாதத்தில் இவ்வளவு பேரா??! அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்..
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசிநேர கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்காமல் இருக்கவும், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளும் வகையிலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட 7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் எளிதாக பயணம் செய்து பயன் பெறுகின்றனர்.

இந்த முன்பதிவு முறையானது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம், https://www.tnstc.in, மற்றும் TNSTC Mobile App வழியாக செயல்படுகிறது. தற்போது, பயணிகள் 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. தினசரி சுமார் 20,000 இருக்கைகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன. பொதுமக்களின் அமோக வரவேற்புடன் செயல்படுகின்ற இத்திட்டத்தினை மேலும் அதிக பயணிகள் பயன்பெறும் வகையில் பிரபலப்படுத்த 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர 'குலுக்கல் முறை' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இந்த சிறப்பு முயற்சிகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கோடை விடுமுறைக்காலமான கடந்த மே மாதம் பயணிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2025 ஆண்டு மே மாதத்தில் மட்டும் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் 7,74,493 பயணிகள் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக ஜனவரி 2025 மாதத்தில் 6,64,632 பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டதே அதிகபட்சமாக இருந்து வந்தது.


