சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

 
 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு,  நாங்குநேரி போன்ற தீண்டாமை கிராமங்களை அடையாளம் கண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பெருந்தெருவைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கையையும் பள்ளியில் நடந்த பிரச்சனையால் கடந்த 9 ஆம் தேதியன்று சக மாணவர்களால் தாக்கியும், மிகக் கொடூரமாக  அரிவாளால் வெட்டியும் உள்ளார்கள். உடன் படித்த மாணவர்களால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த கொலை பாதக செயல்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தங்கையும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.

 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 4 நபர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள் 2 நபர்களையும் கைது செய்திருக்கிறது காவல்துறை. அவர்கள் மீது வன்கொடுமை உட்பட 5 பரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் தொடர்ச்சியாக சின்னத்துரை என்ற மாணவனுக்கு சாதிய ரீதியாக வன்கொடுமைகள் செய்து வந்துள்ளது தற்போது தெரிய வந்திருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே சாதிவெறி நோய் தொற்றிவிட்டதோ எனக் கவலையும், அச்சமுமாக உள்ளது.

எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து முன்னேற வேண்டிய வயதில் சாதியின் பேரில் இதுபோன்ற படுபாதக செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாணவ செல்வங்களின் உள்ளத்தில் சாதிய மனப்பான்மை என்ற நஞ்சை விதைத்தது யார்? தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தீண்டாமையை கடைபிடிப்பதில் 3வது இடத்தை பிடித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் கூறுகின்றது.

 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இதுபோன்ற தீண்டாமை கிராமங்களை அடையாளம் கண்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புநிதியை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். இது போன்று சாதிய மனப்பான்மை கொண்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். மேலும் சமுதாய மாற்றம் வராமல் இதுபோன்ற சமூகநீதிக்கு வேட்டு வைக்கின்ற நிகழ்வுகள் தொடர்நது நடந்து கொண்டுதான் இருக்கும். இதுபோன்ற சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..