ஆன்மீகத் தளத்தின் சமூகநீதி அடையாளம் பங்காரு அடிகளார் - திருமாவளவன்

 
thirumavalavan thirumavalavan

சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர் என்று பங்காரு அடிகளார் குறித்து திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

tn

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அம்மா என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டசித்தர் பீடத்தின் நிறுவனர் - குருதிருமிகு. பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவதோடு அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் துவக்கி  பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு வழிவகுத்தார். ஆண்கள் மட்டுமே கோயிலின் கருவறைக்குள் நின்று பூசை செய்யமுடியும் என்கிற நெடுங்காலத்து நடைமுறையை மாற்றி பெண்களைப் பூசை செய்ய வைத்ததோடு, மாதவிடாய்க் காலத்திலும் கோயிலில் சென்று வழிபடலாம் என்கிற அவரது நிலைபாடு ஆன்மீகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது வெகுவாகப் பெண்களை ஈர்த்தது மட்டுமின்றி ஆன்மீகத்திலும் வழிபாட்டிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியது. இது பக்தியை சனநாயகப்படுத்திய ஆன்மீகப்புரட்சி என்று கூறத் தக்கதாகும்.

thiruma

ஆன்மீகப் பணியோடு பல்வேறு கல்வி நிறுவனங்களை உருக்கி கல்விப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். கல்வியில் பின் தங்கியிருந்த செங்கல்பட்டு உள்ளிட்ட அப்பகுதி தற்போது  முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்திய அளவில் ஆன்மீகத்தின் ஒரு மாற்று அடையாளமாகத் திகழ்ந்தவர்; சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர்.  அத்தகைய சிறப்புகளுக்குரிய அடிகளாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு எமது அஞ்சலியைத் செலுத்துகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.