“அம்மா திட்டியதால் நான் பூச்சி மருந்து குடித்துவிட்டேன்”- தம்பி சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கா
ஆம்பூர் அருகே பள்ளிக்கு செல்லுமாறு தாய் கூறியதால், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதகடப்பா பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மகன் அருள்.இவர் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அருள் சரிவர பள்ளிக்குச் செல்வதில்லை. இதனால் அவரது தாய் உஷா இன்று மகனை பள்ளிக்குச் செல்லாததால் அருளை திட்டிவிட்டு, பணிக்குச்சென்றுள்ளார். இதனால் அருள் வீட்டில் செடிகளுக்கு தெளிக்கும் பூச்சிமருந்தை குடித்துவிட்டு வீட்டிலேயே படுத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அருளின் சகோதரி எதற்காக படுத்து இருகிறாய் என கேட்டதற்கு, அம்மா திட்டதியதால் நான் பூச்சி மருந்து குடித்துவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அருளின் சகோதரி நந்தினி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருளை மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மகனை பள்ளிக்குச்செல்லுமாறு தாய் திட்டியதால், பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


