மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! திருச்சியில் சோகம்
மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் ( 45) இவர் சமயபுரம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ராஜ் ( 19) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சோமசுந்தரம் மது அருந்தி விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த மோகன்ராஜ் உள்ளிட்டவர்களிடம் தகராறு செய்துள்ளார். அதை மோகன்ராஜ் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் வீட்டிலிருந்த மரக்கட்டையை எடுத்து சோமசுந்தரத்தை தலையில் அடித்திருக்கிறார். அப்போது சோமசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி விழுந்தார். சோமசுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோமசுந்தரம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர்.


