'தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்’ - எம்.பிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!!
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” என திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்தக்கூட்டத்தொடரில் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 8 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (18-07-2025) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற “தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் ” நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எம்.பிக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் இந்தக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய பா.ஜ.க. அரசின் 11 ஆண்டுகள் என்பது, மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, எங்கும் - எதிலும் இந்தி & சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, முக்கியமாக, தமிழ்நாட்டை வஞ்சிப்பது என சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதற்குத் தடையாக - மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இல் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும் - தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை - மொழியுரிமை - கல்வியுரிமை - கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


