சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புகள் நேரலை செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

 
appavu


தமிழக சட்டப்பேரவையில் இனி கவன ஈர்ப்பு தீர்மானங்கள் நேரலை செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.  

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விருத்தாசலம்  சிறுமி பாலியல் தொல்லை தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.  அவர், விருத்தாசலத்தில் படிக்கும் 5 வயது  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது  எடப்பாடி பழனிசாமி பேசியதை நேரலை செய்யாததால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்றும், சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.  எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை எடுத்து வைக்கும்போது அரசு தான் அதை கவனித்து சரி செய்ய வேண்டும் என்றும் , சட்டப்பேரவை நடுநிலையோடு செயல்படுவதில்லை என்றும் கூறினார்.   

முன்னதாக பேரவையிலேயே  எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நான் பேசுவதை நேரலை செய்வதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பியிருந்தார்.  அப்போது சபாநாயகர் அப்பாவு அவருக்கு விளக்கமளித்து  பேசும்போது, நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள்  இனி நேரலை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.