அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

 
appavu

சட்டப்பேரவையில் இருந்து  வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 

மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம், அமளியில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது அவைக்குறிப்பில் ஏறாது. கூச்சல் குழப்பம் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று நாள் முழுவதும் அவையில் கலந்து கொள்ள முடியாது என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் இருந்து  வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.