பிப் 8 சட்டபேரவை சிறப்புக் கூட்டம்.. ‘ஆளுநருக்கும், அண்ணாமலைக்கும் இது புரியல..’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

 
மா

 தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் வரும் பிப் 8 ஆம் தேதி நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மேலும் ”நீட்  விலக்கு மசோதா  ஆளுநருக்கும், அண்ணாமலைக்கும் மட்டும் புரியாமல் போனது விந்தையாக உள்ளது"  என்றும் கூறினார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர்  தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில்,    இந்த விவகாரம் தொடர்பாக   அடுத்தகட்ட நடவடிக்கை  குறித்து அலோசனை நடத்த  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட 10   கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஸ்டாலின்

ஆனால் கூட்டணிக் கட்சிகளான  அதிமுகவும் , பாஜகவும்  அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி,  நீட் விலக்கு மசோதாவை மீண்டும்  நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும்  அனுப்ப   தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், " நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி - அண்ணாமலை

மேலும், நீட் விலக்குக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா ஒட்டுமொத்த மக்களுக்கும் புரிந்துள்ளது. ஆளுநருக்கும், அண்ணாமலைக்கும் மட்டும் புரியாமல் போனது விந்தையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.  தமிழக சட்டமன்றத்தில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும்  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே பிஹார் உள்ளிட்ட மாநிலங்களின் விருப்பமாக உள்ளது என்றும் கூறினார்.  தொடர்ந்து  அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாஜகவையும் அதிமுகவையும் மக்கள் எதிர்காலத்தில் புறக்கணிக்கப்பார்கள் என்று தெரிவித்தார்.

மா சுப்பிரமணியன்