வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள்: டிடிவி தினகரன் வேண்டுகோள்!

 
ttv dhinakaran

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்களுக்கு கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரும் 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

TTV

27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அவ்வாறு சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகளுக்கு முன்னதாகவே கழகத்தினர் வரைவு வாக்காளர் பட்டியலைப் பெற்று, அதனைச் சரிபார்த்திட வேண்டும். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் வாக்காளர்களுக்கு
உதவும் விதமாக கழகத்தின் சார்பில் தனி முகாம் அமைத்திடவும் வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், போலி வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள், புலம்பெயர்ந்தவர்கள் ஆகியோரைத் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட பணிகளைத் திறம்படச் செய்திட வேண்டும்.

ttv

வரைவு வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பதில் தனிக்கவனம் செலுத்தி, திருத்தப் பணிகள், கழகத்தினர் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதை, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், அனைத்து சார்பு
அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் உறுதி செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.