ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - முத்தரசன் கண்டனம்!!

 
mutharasan

ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு கடல் எல்லைகளை பாதுகாக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுத்தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூரைச் சேர்ந்த சக்தி பாலன், ஹரி கிருஷ்ணன், சூர்யா, சிரஞ்சீவி, கண்ணன் ஆகிய மீனவர்கள் கடந்த 24ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற் கொள்ளையர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தி 550 கிலோ வலை, 100 கிலோ மீன்கள் வாக்கி டாக்கி, நிறிஷி கருவி, பேட்டரி, டார்ச் லைட், உள்ளிட்டு ஐந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே செப்டம்பர் 23ஆம் தேதி, இதேபோல் சிறுதூரைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

fisher

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 25ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்று உள்ளனர். இவர்களில் பாலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜஸ்டின், சேகர், ஓஸ்வத் பிராங்க்ளின் ஆகிய மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கை கடற்படை இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுவரை இலங்கை கடற்படையினர் தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற நிலையில் இப்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், இலங்கை கொள்ளையர்களாலும் தாக்கப்படுவது மிகப்பெரிய கண்டனத்திற்குரியது.

mutharasan

இலங்கை கடற்படையும் இலங்கை கடற்கொள்ளையர்களும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இத்தகைய அராஜகத்தை செய்யும் பொழுது, இந்திய மீனவர்களையும் இந்திய கடல் எல்லைகளையும் பாதுகாக்க வேண்டிய இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள் இல்லையா? இவர்களை இந்திய கடற்படை பாதுகாக்காதா? என்ற ஐயம் எழுகிறது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு கடல் எல்லைகளை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு மீனவர்களையும் பாதுகாக்க வேண்டும் .பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.