கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : மீனவர்கள் கடலுக்குள் செல்ல அச்சம் - தினகரன் கண்டனம்!!

 
ttv dhinakaran

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை தருவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

fisher

இதுதொடர்பாக  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதோடு, கத்தி முனையில் மிரட்டி அவர்களின் மீன்கள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடமைகளை பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் மூன்றாவது முறையாக அரங்கேறியுள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்படையினர் மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என இருபுறமும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

tn

எனவே, மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதோடு, மீனவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற அவர்களின் உடமைகளையும் மீட்டுத்தருமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.