வன்னியருக்கான உள் ஒதுக்கீட்டை திமுக அரசு சிறப்பாக நிறைவேற்றும் - ஸ்டாலின் உறுதி..

 
mk stalin

வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில் இன்று கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கான 10.5 சதவீத  உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  அப்போது  நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர் தனி ஒதுக்கீட்டை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும்,  வன்னியர் தனி இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யும் ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

 ஜி.கே.மணி

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய  முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் நேரத்தில் அவசர கோலத்தில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.   நீதிமன்றத்தில் தடை வந்ததால் தான் தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  தீர்ப்பு வந்தவுடன் 10.5 சதவீதம் தனி ஒதுக்கீட்டை திமுக அரசு சிறப்பாக நிறைவேற்றும். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வன்னியர் தனி ஒதுக்கீடு, யார் செய்திருந்தாலும் அது மக்களுக்கானது என நாங்களும் தொடர்ந்தோம். ஆணையம் 3 மாத காலத்துக்குள் பணியை முடிக்காததால் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நீட்டிக்கவில்லை, ஆணையம் கேட்டதன் அடிப்படையில்தான் கால நீட்டிப்பு செய்யப்பட்டது” என்று கூறினார்.