முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம்..

 
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும்   600 இடங்களில்  அமைக்கப்பட்டுள்ள பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்  18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  தொடர்ந்து  உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரானின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால்  15 முதல்  18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.  அதன்படி  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும்  பணியை கடந்த 10-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  ஜனவரி 31-ந் தேதிக்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.  

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள்  தொலைபேசி மூலம் முன்பதிவு செய்தால், அவர்களுது வீடுகளுக்கே சென்றும்  பூசர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  அதோடு தமிழகம் முழுவதும்  ஏற்கனவே  சனிக்கிழமைகளில் மெகா  தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில்,  வியாழக்கிழமை (இன்று) முதல்  பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 600 இடங்களில்  பூஸ்டர் டோஸ்  சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி

தமிழகம் மூழுவதும் 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள்  என கண்டறியப்பட்டுள்ளது. எனவே முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை  அறிவுறுத்தியுள்ளது.  வாரந்தோறும் இனி  வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.