காதலிக்காக டிரேடிங் கம்பெனி ஆரம்பித்து...சதுரங்கவேட்டை பட பாணியில் மோசடி..நடந்தது என்ன..?

 
1 1

மக்களை ஏமாற்றுவதற்கு பலரும் பல்வேறு வழிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படியாக ஒரு சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

திருப்பத்தூரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் வேலூர் கலால் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நித்திஷ் (25). பட்டதாரியான நித்திஷ், தன்னுடன் படித்த நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் நட்பாக பழகி, கிரிப்டோ கரன்சி, டிரேடிங், ஷேர் மார்க்கெட் ஆகியவை குறித்து அடிக்கடி பேசி வந்துள்ளார்.

பின்னர், தன்னை நம்பி பணம் கொடுத்தால், அதை கிரிப்டோ கரன்சி, பங்குச் சந்தை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து சில மாதங்களிலேயே இரு மடங்காக மாற்றி தருவேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும், தனது அப்பா காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருவதால், தங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும், தன்னை நம்பி பணத்தை முதலீடு செய்யுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பி பலரும் லட்சக்கணக்கான பணத்தை நித்திஷிடம் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் நித்திஷ்குமாரின் பள்ளி தோழனான சந்தோஷ்குமார் அவர்களது நண்பர்களான விக்னேஷ், வித்யா சாகர், பிரேம்குமார் உள்ளிட்ட மூன்று நபர்களிடம் நித்திஷ்குமார் பல லட்சம் பணம் வாங்கினாராம். ஆனால், பல மாதங்களாகியும் அவர் கூறிய படி முதலீடு செய்த யாருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை.

நித்திஷ்குமார் மோசடி செய்வதை அறிந்த அவரது நண்பர் சந்தோஷ்குமார் உட்பட 3 பேரும், திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பட்ட படிப்பு படித்த நிதிஷ்குமார் டெல்லி சென்று யுபிஎஸ்சி தேர்வு எழுத ஆயத்தம் ஆகி உள்ளார். அங்கு அவருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்துள்ளார்களாம்.

காதலிக்காக "Galaxy Trade" என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்தாராம் நித்தீஷ். அதில் நிர்வாக இயக்குநராக அஞ்சனாவை அமர வைத்தாராம். நித்திஷ்குமாரும் - அஞ்சனாவும் சேர்ந்து ஒன்றுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லி பலரிடம் பணம் வசூல் செய்து, சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்களாம். பணத்தை சொன்னபடி திருப்பிக் கொடுக்காததால் முதலீடு செய்தவர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இதன் பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினர், நித்திஷையும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மாலதியையும் (47) கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மோசடிக்கு உடந்தையாக இருந்த நித்திஷ்குமாரின் காதலி அஞ்சனா தலைமறைவாக இருக்கிறாராம். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.