ராணிப்பேட்டை சிப்காட்டில் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்

 
tn

சிப்காட்-இராணிப்பேட்டையில் ரூ.145 கோடி முதலீட்டில் SOL இந்தியா நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.07.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தொழிலக மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டுவரும் SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 145 கோடி ரூபாய் முதலீட்டில் இராணிப்பேட்டை- சிப்காட் நிலை 3-ல் திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் (Liquid Argon) உற்பத்தியை மேற்கொள்ளுவதற்காக அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

stalin

தமிழ்நாடு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்திடவும், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை அடைந்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

mk stalin

இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை ரூ.2,96,681 கோடி முதலீட்டில் 4,14,836 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 240 திட்டங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம்
SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் (இதற்கு முன்பு சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட்) இத்தாலி நாட்டைச் சேர்ந்த SOL SpA மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இதன் உற்பத்தி மையங்கள் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி மற்றும் இராணிப்பேட்டையில் ஆகிய இரண்டு இடங்களில் அமைந்துள்ளன.

MK Stalin

தற்போது, இந்நிறுவனம் 145 கோடி ரூபாய் முதலீட்டில், இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 ல் திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் (Liquid Argon) உற்பத்தியை மேற்கொள்ளுவதற்காக ஒரு அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார். இந்த விரிவாக்கத்தின் மூலம், தற்போது நாளொன்றிற்கு 80 டன் என்ற அளவில் உள்ள இதன் உற்பத்தித் திறன், நாளொன்றிற்கு 200 டன் என்ற அளவிற்கு அதிகரிக்கும்.