"மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 
minister subramaniam

மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

corona patient

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு தவனை தடுப்பூசிகள் போட்டுள்ளனர்; அதனால் தான் அவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் கொரோனா பாதுகாப்பு மையமாக மாற்றப்படும். ஒமிக்ரான் தொற்று பரவலை அடுத்து சென்னையில்  3 இடங்களில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 500 படுக்கைகள் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்" என்றார் .

minister

தொடர்ந்து பேசிய அவர், "15 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 3 ஆம் தேதி போரூர் பகுதியில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்துவருகிறது.  சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தெரு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 100% முக கவசம் அணிய வேண்டும்,  மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சனிக்கிழமை புத்தாண்டு தினம் என்பதால் 17வது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.