"தென் மாவட்ட மக்களை மழை பாதிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை தேவை" - ஜி.கே.வாசன்

 
GK Vasan

சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை படிப்பினையாக கொண்டு, தென் மாவட்ட மக்களை மழை பாதிப்பில் இருந்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

gk vasan

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரி கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் அதிக கன மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னரே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தும், தமிழக அரசு முன்னேற்பாடாக இருந்ததாக தெரியவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக மழைப் பொழிவினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்படுவதால் தாமிபரணி ஆற்றில் காற்றாற்று வெள்ளம் கரைப்புரண்டு ஊருக்குள் சென்று வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் சாலைகள் தண்ணீரால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

gk

சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை படிப்பினையாக கொண்டு உடனடியாக தென் மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை முன்னேற்பாடாக செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான, உணவும், குடிக்க தண்ணீர், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான பால் மற்றும் மருத்துவ உதவிகள், மெழுகுவர்த்தி போன்ற அடிப்படை தேவைகளை உடனடியாக செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகளில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துகள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மக்களுக்கு உரிய எச்சரிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளையும், உதவிகளையும் துரிதமாக தமிழக அரசு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.