#BREAKING பிட்புல் நாய் கடித்து தெருநாய் உயிரிழப்பு! சென்னையில் பரபரப்பு
சென்னையில் தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாய் கடித்ததில் தெரு நாய் பலியான சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவில் 5ஆம் தெருவில் வசிக்கும் பழனி என்ற நபர் வீட்டில் இரண்டு பிட்புல் மற்றும் ஒரு ராட்வில்லர் நாய்களை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் பிட்புல் நாய்களில் ஒன்று திடீரென வெளியில் வந்து அப்பகுதியில் இருந்த மற்றொரு நாயை கடுமையாக கடித்து குதறியது. பிட்புல் ரக நாய் கடித்துக் குதறியதில் அந்த நாய் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கிலி மற்றும் முக கவசம் அணியாமல் வளர்ப்பு நாய்கள் உரிமையாளர் இன்றி பொதுவெளிக்கு அழைத்து வரக்கூடாது என்ற உத்தரவு இருக்கும் நிலையில் தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாய் சாலையில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசு கடந்தாண்டு மார்ச் மாதம் 23 ரக நாய்களை தடை செய்து உத்தரவிட்டது. இவற்றில் பிட் புல் ரக நாய்களும் அடக்கம்.இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


