+2 மாணவி பலாத்காரம் வழக்கில் கைதானவர் கொலை குற்றவாளி- வெளியான அதிர்ச்சி தகவல்
+2 மாணவி பாலியல் கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 நாட்களுக்குப் பிறகு சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன், கடந்த 2020-ம் ஆண்டு எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் 2024 ஆகஸ்ட் மாதம் ஆயுள் தண்டனை பெற்றவர். அத்தகைய கொடூரக் குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது எப்படி? ஜாமீனில் வெளிவந்த ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளியைக் காவல்துறை ஏன் தொடர்ந்து கண்காணிக்கவில்லை? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

