முதல்வர் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர்- வைரலாகும் வீடியோ
முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் மாணவர் ஒருவர் பட்டம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 87வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் இன்று நடைபெற்றது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளரும் உயர்கல்வித்துறை செயலாளருமான முனைவர் சங்கர் வரவேற்று ஆண்டு அறிக்கை வாசித்தார். ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் கமல் கிஷோர் பண்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டமளிப்பு விழாவை நடத்தி 1014 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், வேளாண்மை, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படிக்கும் 36,829 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிட ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
முதல்வர் புகைப்படத்துடன் பட்டம் பெற்ற மாணவன்.#Governor #RNravi #Stalin #Chanakyaa pic.twitter.com/uIoDIELpME
— சாணக்யா (@ChanakyaaTv) February 2, 2026
சமீப காலங்களாக ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது. அதன் காரணமாக பட்டமளிப்பு விழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பதில்லை. அந்த வகையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் மாணவர் ஒருவர் பட்டம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


