நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

 
student

ஆத்தூர் அருகே தனியார் பள்ளியில் செயல்பட்டு வந்த நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவன் தேர்வு பயத்தால் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் சந்துரு ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில், சென்ற ஆண்டு பிளஸ் 2 முடித்தவுடன் அதே பள்ளியில் நீட் தேர்வுக்காக செயல்பட்டு வரும் ரீச் தேர்வு மையத்தில் மாணவன் சந்துருவை அவரது தந்தை சேர்த்துள்ளார். 

இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவன் அடுத்த மாதம் 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பயிற்சி மையத்தில் பயின்ற மாணவன் சந்துரு நீட் தேர்வு பயத்தால் மாணவன் தங்கி இருந்த பயிற்சி மையத்தின் விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. சந்துருவின் அரை நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து அறை மாணவன், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சந்துரு மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

இதுதொடர்பாக பக்கத்து அறை மாணவன் தெரிவித்ததை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தது. இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் பிரேதத்தை கைப்பற்றி மாணவன் நீட் தேர்வு பயத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டானா அல்லது வேறு ஏதாவது காரணமாக என விசாரணை செய்து வருகின்றனர்.