அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. மீறினால் - தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை..

 
govt

அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும்  மாணவர்களிடமிருந்து கட்டணங்களை கண்டிப்பாக வசூலிக்கக் கூடாது எனவும்   மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அரசாணையில், “அரசாணை (நிலை) எண்:221 உயர்கல்வித் (ஜே2) துறை நாள்: 15.11.2021-ல், அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணாக்கர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவீனங்களான, படிப்புக் கட்டணம் (Coursa fee), விடுதிக் கட்டணம் (Hostel fee) அல்லது போக்குவரத்துக் கட்டணம் (Transport fee) உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரின் கடித எண்.3300/TNEA/2021-Fes Reimbursement Dated: 5.10.2021. வாயிலாக அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் எந்த வித கட்டணங்களையும் மேற்படி இடஒதுக்கீட்டில் சேரும் மாணாக்கர்களிடம் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

engineering

அரசாணை (நிலை) எண்:85 உயர்கல்வித் (ஜே2) துறை நாள்: 15.04.2010-ல், அரசு, அரசு உதவி பெறும் மற்றம் தனியார் தொழிற் கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாயிவின் மூலம் சேர்க்கைப் பெறும் முதல் பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டண (Tuition fee) சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் பட்டதாரி மாணாக்கர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என தெரியப்படுத்தப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்:5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந3) துறை நாள்: 09.01.2012 மற்றும் அரசாணை (நிலை) எண்:51 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந3) துறை நாள்: 07.08.2013-ன்படி சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் திதிராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ மதம் மாறிய மாணவ / மாணவியரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்குள் உள்ளவர்களுக்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்துக் கல்வி கட்டணங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

engineering counselling - அமைச்சர் க.பொன்முடி

மேலும் அக்கட்டணங்கள் அனைத்தும் மாணாக்கர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டப்பின் மாணாக்கர்கள் அக்கட்டணங்களை அவர்கள் பயிலும் கல்லூரிக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு மாணாக்கர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் முன்னர் மேற்படி இடஒதுக்கீட்டில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களிடம் எந்த வித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆயினும் அரசின் மேற்படி ஆணைகளை மீறி சில பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வின் வழி அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவ/மாணவிகளிடமிருந்து அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்தப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன. எனவே, அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் மேற்கண்ட அரசாணையின் பயனாளிகளிடமிருந்து கட்டணங்களை பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வசூலிக்கக் கூடாது என கண்டிப்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.