மாணவர்கள் ஷாக்..! சிபிஎஸ்இ-யில் இனி 'பிரெஞ்ச்' படிக்க முடியாதா?

 
cbse exams

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) 2026-27-ஆம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து, நாடு முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், மாணவர்கள் ஆங்கிலம்(ஆர்1) மற்றும் ஏதேனும் 2 இந்திய மொழிகள்(ஆர்2, ஆர்3) என 3 மொழிகளை படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ (2026–27) பாடத்திட்டப்படி மூன்றாவது மொழியை தேர்வு செய்து பள்ளிகள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் சதீஷ் கூறுகையில், "சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசியக் கல்விக்கொள்கை-2020 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர், 5ஆம் வகுப்புவரை ஆங்கிலமும், வேறு ஒரு மொழியும் கற்பிக்கப்பட்டது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆங்கிலமும் அதனுடன் 2 மொழிகள் கற்பிக்கப்பட்டன. அதில் கட்டாயமாக 2வது அல்லது 3வது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் ஒரு மாெழி பாடத்தை கற்க வேண்டும். அந்த ஒரு மாெழி, இந்தி, ஜெர்மன், மலையாளம் என எதுவாகவும் இருக்கலாம் என்று இருந்தது.

தேசிய கல்விக் கொள்கை-2020 அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக சேர்க்கப்பட்டது. 2 இந்திய மாெழிகள் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 2 மொழிகளில், தமிழ்நாடு என்றால் தமிழும், மற்றொரு மாெழியாக மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஏதேனும் ஒரு இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ சுற்றறிக்கை

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்குகின்றன. அந்தப் பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கும். தமிழும் கட்டாயமாக வந்துவிடும். ஆனால், ஒவ்வொரு மாணவரும் விரும்பும் மொழியை கற்றுத் தர முடியாது. தேசியக்கல்விக் கொள்கை 2020-க்கு முன்னர் இருந்தது போல் தமிழ், ஆங்கிலம், இந்தியை கொண்டு வந்துள்ளனர்.

6-ஆம் வகுப்பு மாணவர்கள் 2031ஆம் ஆண்டில்தான் பொதுத் தேர்வினை எழுத உள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஏற்கனவே மும்மொழிக் கொள்கை உள்ளது. தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களையும் இதில் சேர்த்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

மும்மொழி கொள்கை அறிமுகம் குறித்து கல்வியாளர் விஜயன் கூறுகையில், "சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மும்மாெழி கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், மாணவர்கள் ஆங்கிலம்- (ஆர்1-வெளிநாட்டு மொழி) மற்றும் ஏதேனும் 2 இந்திய மொழிகள்(ஆர்2, ஆர்3) என 3 மொழிகளை படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும்பாேது, கற்பிக்கும் மொழி ஆங்கிலம் எனக் கூறி அனுமதி கொடுக்கிறார்கள். அனுமதி அளிக்கும்போது கற்பிக்கும் மொழி தமிழ், சமஸ்கிருதம் என வேறு மாெழிகளை சொல்லவில்லை.

கற்பிக்கும் மொழி ஆங்கிலம் என கூறிவிட்டு, அதனை வெளிநாட்டு மாெழியாக(ஆர்1) எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். மற்ற 2 மொழிகள் (ஆர்2, ஆர்3) என்பதில் ஏதாவது 2 இந்திய மொழிகளை படிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏதேனும் 2 இந்திய மொழிகள் படிக்க வேண்டும் என்றால், தமிழ்- இந்தி அல்லது தமிழ்- மலையாளம் அல்லது தமிழ்- சமஸ்கிருதம் என எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் வெளிநாட்டு மொழியாக ஆங்கிலமும் (ஆர்1), இரண்டாவது மொழியாக (ஆர்2) தமிழும் வந்துவிடும். ஆனால், மூன்றாவது மொழியாக (ஆர்3), மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளை படிப்பதற்குப் பதிலாக இந்தியைத் தான் மாணவர்கள் படிக்க விரும்புவார்கள். இதனால் பிரெஞ்ச் மொழியை விரும்பும் மாணவர்கள் அதனை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

3-ஆவது மொழியும்(ஆர்3) பொதுத் தேர்வில் இடம்பெறும். ஆனால் அதற்கான மதிப்பெண்கள் சான்றிதழில் இடம் பெறாது.

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜனவரி மாதம் முதலே மாணவர்களின் பெற்றோரிடம் கேட்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் பிரெஞ்ச் பாட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பிரெஞ்ச் பாடத்திற்கான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மாணவர்களுக்கு பிரெஞ்ச் கற்பிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் சிபிஎஸ்இ பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மொழி என எதை தேர்வு செய்வீர்கள் என மாணவர்களிடம் கேட்கும்போது, அவர்கள் இந்தியைத்தான் விரும்புகின்றனர். வேலைக்கு செல்லும்போது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பெற்றோரும் அதனை படிக்க வைக்க விரும்புகின்றனர் .

ஆனால், பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும்போது கற்பிக்கும் மொழி ஆங்கிலம் என கூறியுள்ளனர். எனவே ஆங்கிலம் என்பதற்குப் பதிலாக ஆங்கிலம் அல்லது ஏதாவது வெளிநாட்டு மொழி என கூறியிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்தார்.