சத்துணவில் பல்லி! மயங்கி விழுந்த மாணவர்கள்
வேலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் மிகவும் பழமை வாய்ந்த வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி ( அரசு நிதி உதவி ) இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வரும் சூழ்நிலையில் இங்கு நாள்தோறும் மதியம் பள்ளி மாணவர்கள் 250 பேருக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் விடுமுறை முடித்து இன்று பள்ளி வந்த மாணவர்களுக்கு பிற்பகலில் சத்துணவு வழங்கும் பணிகள் துவங்கியது. 25 மாணவர்களுக்கு சத்துணவு விநியோகம் செய்த போது சத்துணவில் பல்லி இறந்த கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவன் சத்துணவு ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சத்துணவு விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டு உடனடியாக தலைமை ஆசிரியருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த மருத்துவ குழு சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு மாணவர் திடீரென மயங்கி விழுந்ததால் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு பள்ளன் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சத்துணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து வந்த வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சம்பவம் குறித்து மருத்துவக் குழுவினரிடம் ஆசிரியர்களிடமும் விவரங்களைக் கேட்டறிந்தார். வேலூரில் சத்துணவு சாப்பிட்ட மாணவர் மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


