தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்றா?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழகத்தில் புதிதாக எந்த வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும் மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உருமாறும் டெல்டாவை கொரோனா வைரஸ், புதிய வகை வைரஸாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் வட மாநிலங்களில் அந்த வைரஸ் பரவத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்படும் இடங்களில் இருந்து மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்த போது 84 சதவீதம் பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் உறுதியானது. மீதமுள்ள 16 சதவீதம் பேருக்கு சாதாரண கொரோனா வைரஸ் தான் என்பது கண்டறியப்பட்டது. 13 பேருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், புதிதாக எந்தத் தொற்றும் ஏற்படவில்லை என்றும் இனியும் ஏற்படாது என நம்புவோம் என்றும் அவர் கூறினார்.