நாய் குறுக்கே வந்ததால் திடீர் பிரேக்- கணவன் கண்முன்னே மனைவி பலி! குழந்தைக்கு சுவட்டர் வாங்க சென்றபோது சோகம்
வாணியம்பாடி அருகே கடும் குளிரால் குழந்தைக்கு சுவட்டர் வாங்கி வர மனைவியை அழைத்து சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த அப்புன் (35). இவரது மனைவி புஷ்பராணி( 28). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது ஐந்து வயது குழந்தைக்கு ஸ்வட்டர் வாங்குவதற்காக அப்புன் மற்றும் அவரது மனைவி புஷ்பா ராணி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி சென்றுகொண்டு இருந்தனர். அப்போது பத்தாபேட்டை அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக தெருநாய் குறுக்கே வந்ததால் அப்புன் சட்டென்று இருசக்கர வாகனத்தின் பிரேக் போட்டதால் எதிர்பாராத விதமாக மனைவி புஷ்பா ராணி நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த புஷ்பா ராணியை பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் புஷ்பராணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைக்கு சுவட்டர் வாங்க சென்ற தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


