அமேசான், ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் ரெய்டு- ரூ.36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

 
s s

திருவள்ளூர் மாவட்டத்தில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் அதிகாரிகளின் சோதனையில் தரச் சான்றளிக்கப்படாத 36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


 
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதுவாயலில் அமைந்துள்ள அமேசான் மற்றும் கோடுவெளியில் அமைந்துள்ள பிளிப்கார்ட் ஆகிய மின்வணிக நிறுவன கிடங்குகளில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) அதிகாரிகளைக் கொண்ட இரண்டு குழுக்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சான்றளிக்கப்படாத காப்பிடப்பட்ட பிளாஸ்க்குகள், காப்பிடப்பட்ட உணவு கொள்கலன்கள், உலோக குடிநீர் பாட்டில்கள், சீலிங் ஃபேன்கள், பொம்மைகள், குழந்தை டயப்பர், கேசரோல் / காப்பிடப்பட்ட ஹாட்பாட், துருவேறா எஃகு தண்ணீர் பாட்டில், காப்பிடப்பட்ட எஃகு பாட்டில் ஆகிய பொருட்கள் பல தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறியதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. 

இதே போல ஃபிளிப்கார்ட் கிடங்கில் நடைபெற்ற சோதனையில் 286 குழந்தை டயப்பர்கள், 36 பெட்டிகள் கேசரோல் / காப்பிடப்பட்ட ஹாட்பாட், 26 துருவேறா எஃகு வாட்டர் பாட்டில் மற்றும் 10 காப்பிடப்பட்ட ஸ்டீல் பாட்டில் பொருட்கள் தேவையான பிஐஎஸ் தரநிலை முத்திரை (ஐஎஸ்ஐ) இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் பிஐஎஸ் தர முத்திரை இல்லாத, ரூ.36 லட்சம் மதிப்புள்ள 3376 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் மீது இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016-ன் கீழ் பி.ஐ.எஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.