திடீர் திருப்பம்..!! ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கு - வழக்கறிஞர் ப.ப.மோகன்..!
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் இருப்பதாகவும், அந்த அறிக்கையில் இறப்புக்கான நேரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும் வேறு எந்த தகவல்களும் இல்லை என வழக்கறிஞர் ப.ப.மோகன் திருப்பூரில் பேட்டி
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கு தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் வழக்கறிஞர் ப.ப.மோகன் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவை சந்தித்தனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ப.ப. மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ள ரிதன்யாவின் வழக்கில் அவிநாசி போலீசாரின் புலன் விசாரணையில் முழுமையான உண்மைகள் வெளிவரவில்லை. ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சமயத்தில் அவர் பேசிய 9 ஆடியோக்கள் வெளியே வந்துள்ளது. ஆனால் இதுவரை வெளி வராத வரதட்சணை கேட்டது தொடர்பான ஆடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் கருத்தில் கொண்டு தான் ரிதன்யாவின் தந்தை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தான் கவினுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் பிறகு கவின் அவருடைய செல்போன் சிம் கார்டு சம்பந்தமான ஆதாரங்களை அழித்துள்ளார். மேலும் தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விடுபட்ட தகவல்கள் குறித்து தெரிவித்துள்ளோம். தற்கொலை சம்பவம் நடந்த உடனேயே ரிதன்யாவின் செல்போன் மற்றும் ரிதன்யா தந்தையின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர் அதன் பின்னர் 5 மணி நேரம் கழித்து அதனை திருப்பிக் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் சமூக வலைதளங்களிலும் மீடியாவிலும் ரிதன்யாவின் ஆடியோக்கள் வெளியே வந்துள்ளது இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வழக்கு பதியப்பட்டு இவ்வளவு நாட்கள் ஆகியும் ரிதன்யாவின் அறைக்கு சென்று போலீசார் புலன் விசாரணை மேற்கொள்ளவில்லை. மேலும் இந்த வழக்கை வரதட்சணை கொடுமை வழக்காக பதிவு செய்யாமல் தற்கொலை வழக்காக பதிவு செய்தது மேலும் சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது என்பது போன்ற விஷயங்களை நீதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக நாங்கள் கூறிய தகவல்களை அனைத்தும் உரிய முறையில் புலன் விசாரணை செய்ய உத்தரவிடுவதாகவும் அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார் அதன் அடிப்படையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேசி விட்டு வந்தோம் என்றார்.
ரிதன்யா தற்கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆனால் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் எங்களுக்கு உள்ளது குறிப்பாக விஷம் அருந்தி இறந்தவர்களின் உள் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும் அந்த உள் உறுப்புகளை முறையாக பரிசோதனை செய்து அறிக்கை வெளிவந்த பின்னர் தான் பிரேத பரிசோதனை அறிக்கையை முடிக்க வேண்டும் ஆனால் இங்கு அந்த அறிக்கை வருவதற்கு முன்னரே இறந்த நேரத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அதைத் தவிர வேறு எந்த தகவல்களுமே பிரேத பரிசோதனை அறிக்கையில் இல்லை.
இது தொடர்பாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் தெரிவித்துள்ளோம் அவர் முறையாக புலன் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என தெரிவித்தார்.


