சூப்பர் அறிவிப்பு.. இனி 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் விடுப்பு..!
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் விடுத்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டுக்கு விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. இனிமேல் பேறு கால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.
வழக்கு விவரம்
பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உயர் நீதிமன்றம் பல உத்தரவு பிறப்பித்த போதிலும், மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது வருத்தத்தை அளிப்பதாக நீதிபதிகள் சுரேஷ் மற்றும் ஷமிம் கூறினார். நீதிமன்ற ஊழியர் பி. மங்கையர்க்கரசிக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உயர் நீதிமன்ற பதிவாளர் (மேலாண்மை) மறுத்துவிட்டதாக நீதிபதிகள் கண்டறிந்தனர்.
இருப்பினும், இதேபோன்ற ஒரு வழக்கில் மூன்றாவது கர்ப்பத்திற்கும் இதுபோன்ற சலுகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற ஊழியர்களை பொறுத்தவரை, கண்டிப்பாக உத்தரவுகளை கடைபிடிப்பதற்காக மாநில முழுவதும் உள்ள மாவட்ட நீதித்துறையின் பிரிவுகளின் அதிகாரிகளுக்கு தங்கள் உத்தரவின் நகலை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் தமிழகு அரசு வழங்குகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கும் நடைமுறை இருந்து வந்த நிலையில், சமீபத்திய நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் விதியில் உள்ளது. மகப்பேறு விடுப்பு காலத்தில் முழு சம்பளமும் கிடைக்கும். இந்த விடுப்பு ஊழியர்களின் கணக்கில் உள்ள பிற விடுப்புகளை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்து.


