சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் காலமானார்! ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்..!
மூத்த தமிழ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌதரி, உதய்பூர் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆர்.பி.சவுத்ரி தனது சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1988-ம் ஆண்டு வெளியான ‘அடிபாபம்’ மலையாள படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் ஆர்.பி.சௌத்ரி. அதன்பிறகு 1990 ஆம் ஆண்டு வெளியான ‘புது வசந்தம்’ படத்தை தயாரித்து தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளை கடந்து படங்களை தயாரித்தார்.இதுவரை அவர் தயாரிப்பில் 98 படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்து விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது படம். 100வது படத்தை விஜயை வைத்து தயாரிக்க ஆசைப்பட்டார் ஆர்.பி.சௌத்ரி. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் போனது.
பிரபல பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
டி.டி.வி தினகரன் இரங்கல்
ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், சிறந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவருமான திரு ஆர்.பி சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு. ஆர்.பி.சவுத்ரி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் இரங்கல்
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் இரங்கல்
ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் அலுவலகத்தின் X பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையின் மூலம் பவன் கல்யாண், உதய்பூர் அருகே சௌதரி ஒரு கொடூரமான சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அதை நம்ப முடியவில்லை என்றும் கூறினார். அவரது ஆன்மா சாந்தி அடைய அவர் பிரார்த்தனை செய்தார். மேலும், ' சுஸ்வாகதம்' படத்தில் அவருடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்து , அப்படத்தை ஒரு வெற்றிப் படம் என்று குறிப்பிட்ட அவர், திரைப்படத் தயாரிப்பில் அவரது நிபுணத்துவத்தையும், குடும்பப் படங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார். அவர் சௌதரியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சிரஞ்சீவி இரங்கல்
நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் வலைதள பதிவில், "புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி. சௌதரி அவர்களின் திடீர் மற்றும் துயரமான இழப்பைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். எனக்கு அவரைப் பல ஆண்டுகளாகத் தெரியும். சமீபத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் எனது 'காட் ஃபாதர்' திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியிருந்தேன். அவர் பல திறமையான இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் திரை வாழ்க்கையை வடிவமைத்து, எண்ணற்ற கதைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு அவரது பங்களிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பில் அவர்களுக்குத் தெம்பு கிடைக்கட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை இரங்கல்
தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இந்தியத் திரையுலகின் முக்கியத் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர்கள் திரு. ஜீவா மற்றும் திரு. ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையாருமான, திரு. R.B. சவுத்ரி அவர்கள், சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக, பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கும் மேல் தயாரித்து, எண்ணற்ற கலைஞர்களையும் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சிறந்த கதையம்சம் பொருந்திய திரைப்படங்களைத் தந்து, மக்களை மகிழ்வித்தவர்.திரு. R.B. சவுத்ரி அவர்கள் பிரிவு, இந்தியத் திரையுலகிற்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று கூறியுள்ளார்.

