'தக் லைஃப்’ வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்..

 
thug life thug life

“தக் லைஃப்” திரைப்படம் திரையிடும் திரையரங்கங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடக திரையரங்கு சங்கம் தாக்கல் செய்த  மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் கமல், சிலம்பரசன் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்தத் திரைப்படம் கடந்த  ஜூன் 5ம் தேதி  உலகம் முழுவதும் வெளியான நிலையில், கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை.  முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான கமல்ஹாசன்,  கன்னட மொழி  தமிழில் இருந்து பிறந்ததாக தெரிவித்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில்,  கர்நாடகாவில் திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் திரைப்படம் திரையிட்டால் திரையரங்கங்கள் தீயிட்டு கொளுத்தப்படும் என்று சில கன்னட அமைப்புகள் பகிரங்கமாக எச்சரித்தனர். 

thug life

இந்நிலையில் கர்நாடக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தக் -லைஃப் திரைப்படம் திரையிடுவதற்கான அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.  மனு மீதான விசாரணை இன்று நீதிபதி பி.கே மிஸ்ரா அமர்வில் வந்தபோது, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலரால் நேரடியாக திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும்,  படம் திரையிடப்பட்டால் தியேட்டர்கள் கொளுத்தப்படும் என அச்சுறுத்துவதாக வாதம் முன் வைத்தனர். 

supreme court

அதற்கு நீதிபதியோ, அப்படி என்றால் தீயணைப்பு உபகரணங்களை தியேட்டரில் நிறுவுங்கள்,  மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிடுங்கள் எனக் கூறி மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தார். ஆனாலும், தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கிறார்கள் என மீண்டும் கூறியபோது, மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி, வேண்டுமென்றால்  கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என அறிவுறுத்தி  நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.