டாஸ்மாக் விவகாரம் - அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவதாகவும், மதுபான ஆலைகள் மற்றும் டாஸ்மாக் நிறுவனம் கூட்டு சேர்ந்து பொய்யான கணக்குகள் மூலம் கோடிக்கணக்கில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், அண்மையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில், டாஸ்மாக்கில் ₹1000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இருப்பினும், இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


