ஆக்.3ல் முதுநிலை நீட் தேர்வு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு..
முதுகலை நீட் தேர்வை ஆக.3ம் தேதி ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலைப் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் 15ம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2,42,678 பேர் முதுநிலை நீட் தேர்வை எழுத இருந்த நிலையில், தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெறுமென தேசிய தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் இதனை எதிர்த்து மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ வாரியம் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது என்றும், ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து ஜூன் 15ம் தேதி 2 ஷிப்டுகளாக நடத்தப்பட இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது , 2.20 லட்சம் மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வெழுதும் நிலையில் ஒரே ஷிப்ட் ஆக தேர்வு நடத்தினால், 450 கூடுதல் மையங்கள் தேவைப்படும் என தேசிய தேர்வு முகமை வாதிட்டது.
ஆனால், "கால அவகாசம் மிக அதிகமாக உள்ளது. மையங்களைக் கண்டறிய ஏன் இவ்வளவு அவகாசம்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு "தேர்வு மையங்களை கண்டறிந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடுதல் அவகாசம் தேவை" என தேர்வு வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், நீட் முதுநிலைத் தேர்வை ஆக.3ம் தேதி நடத்தலாம எனவும், ஆனால் அதற்கு பிறகு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் தீர்ப்பளித்தனர்.


