பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அற்றக்கோரிய வழக்கு: ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம்..!!

 
கொடிக்கம்பம் கொடிக்கம்பம்

 தமிழகம் முழுவதும் பொதுஇடங்கள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது  

மதுரை பழங்காநத்தம் பேருந்து நிலையத்திற்கு முன்பு தங்களது கட்சி கொடி கம்பத்தை நிறுவ கோரிய மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து,  கட்சி கொடி கம்பம் நிறுவுவதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க கோரி கதிரவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல மதுரையை சேர்ந்த அம்மாவசைத் தேவர் உள்ளிட்ட பலர் இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி,  தமிழ்நாடு முழுவதும், பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை  அகற்ற வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது

இதனையடுத்து  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில்  தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் மேல் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 31சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  தமிழகத்தில் மீதமுள்ள 19 மாவட்டங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு முழுமையாக ஜூலை 24 ம் தேதிக்குள் அமல்படுத்தப்படவில்லை என்றால்  கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.  

  உச்சநீதிமன்றம்

இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து அம்மாவாசை தேவர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிவிஷன் அமர்வில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு தவறையும் காணவில்லை என்றும் இந்த மனுவில் மேற்கொண்டு தலையிட விரும்பவில்லை எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

இதனைத் தொடர்ந்து கதிரவன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.  அந்த மனுவானது நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்னை உயர் நீதிமன்றத்தில் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் கொடிக்கம்பத்தை அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். ஆனால் மனுவின் கோரிக்கையை தாண்டி பொது இடங்களில் கொடி கம்பங்களை வைக்க கூடாது எனவும்,  இருக்கும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆனது உத்தரவிட்டுள்ளது” என தெரிவித்தார்

அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முறையாக ஆராய்ந்து உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.  குறிப்பாக அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அரசு இடத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் ?  என கேள்வி எழுப்பியதோடு , ஏற்கனவே இதே போன்ற ஒரு விவகாரத்தில் ஆந்திரா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது.  எனவே கொடிக்  கம்பம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான முறையில் பிறப்பித்த இந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்