கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..! கங்குவா சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!
நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர். படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவ. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், திரைப்படம் வெளியாகும் முதல் நாளான நவ. 14 மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை சேர்த்து மொத்தம் 5 காட்சிகளை திரையிட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் 5 காட்சிகளையும் திரையிட்டு முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகள், வட இந்தியாவில் 3,500 திரைகள் உள்பட ஒட்டுமொத்தமாக 6,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.