தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் போர்வாள் மாயம்
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் இருந்த 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயமானதாக பொறையார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வாணிபம் செய்ய வந்த டேனீஸ் காரர்களால் 1620 ஆம் ஆண்டு டேனிஸ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டேனிஷ் கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோட்டையில் உள்ளே அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல நூற்றாண்டுகளைக் கடந்த பழங்கால பொருள்கள் போர்வாள்கள் நாணயங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அகழ் வைப்பக்கத்தில் இருந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்வாள் ஒன்று காணாமல் போய்விட்டதாக பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை இளநிலை உதவியாளர் தினேஷ்குமார் அளித்த புகாரில் நேற்று பணியில் இருந்த நினைவுச் சின்ன காவலரான பவித்ரன் என்பவர் நினைவுச் சின்னங்களை சரிபார்த்துவிட்டு இரவு நினைவுச்சின்ன காவலர் ரமேஷ் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு நேற்று காலை பணிக்கு வந்து மீண்டும் நினைவுச் சின்னங்களை சரிபார்த்த போது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 45 சென்டி மீட்டர் அளவுள்ள இரும்பு போர்கத்தியை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொறையார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அகழ் வைப்பகத்தில் இருந்த 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்வாள் மாயமானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


