‘பேச்சு மோசமானது தான்.. அதுக்காக இப்படி வழக்கு போட முடியுமா?’ - சி.வி.சண்முகத்தின் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்..
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022ம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின்பேரில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மனு அளித்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், “சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மோதலை ஏற்படுத்துதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு காவல்துறை தரப்பில், அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளையும் என்பதால் இந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்டு இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.