தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிவகங்கை பஸ் விபத்து: அவசர உதவி எண் அறிவிப்பு..!

 
1 1

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே சென்றபோது இந்த 2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில், சிவகங்கை பஸ் விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அவசர உதவி எண் அறிவித்துள்ளது. பஸ் விபத்து குறித்த தகவல்கள், மற்றும் பிற அவசர சேவைகள் குறித்து தொடர்புகொள்ள கீழ்க்காணும் உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது:

*அவசர உதவி எண்: 04575 – 246233

விபத்தில் சிக்கியவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், காரைக்குடி – திருப்பத்தூர் சாலை, கும்மங்குடி கிராமத்தில் இன்று (30.11.2025) பிற்பகல் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த 9 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 11 நபர்கள் உயிரிழந்தனர், மேலும், 54 நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.


இவ்விபத்தில், காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அரசு மருத்துவர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டியவர்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.