‘உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள்’ - இளைஞர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை..!!
போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என இளைஞர்களிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
போதைப்பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காவல்துறையினரும் கஞ்சா வேட்டை, கஞ்சா 2.0 என பல்வேறு திட்டங்களை வகுத்து போதையை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் தமிழகத்தில் போதைக்கலாச்சாரம் அதிகரித்த வண்ணமே உள்ளன. அங்காங்கே கிலோ கணக்கில், டன் கணக்கில், மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பிடிபட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் இளைஞர், மாணவ சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். போதை ஒழியட்டும். பாதை ஒளிரட்டும்” என்று பேசியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் போதைக்கு எதிராக பரப்புரை செய்துள்ளார். அதில் விஜய் ஆண்டனி கூறியதாவது, “போதை என்பது ஒரு கொடிய விலங்கு. சமீபகாலமாக தமிழ்நாடு அரசு அதை ஒழிக்க பெரும்பாடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு நாமும் துணை நிற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


