அத்திக்கடவு - அவிநாசி திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
MK Stalin

 ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  காணொலி காட்சி வாயிலாக  தொடங்கி வைக்கிறார்.  

ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மேற்கு மாவட்ட மக்களின்  60 ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது அத்திக்கடவு - அவிநாசி திட்டம்.  கடந்த 2019ம் ஆண்டு  ரூ.1,659 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்த அத்திக்கடவு - அவிநாசி  திட்டம், கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன்  ரூ. 1916.41 கோடி செலவில் முடிக்கப்பட்டது. 

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்

இந்த திட்டமானது  காலிங்கராயன்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, உபரி்நீரை  ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் உள்ள 1045 குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்வதே ஆகும். ஒவ்வொரு ஆண்டும்  70 நாட்களுக்கு தினமும் 250 கன அடி வீதம், ஆண்டுக்கு 1.5 டிஎம்சி நீரை மேற்கு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டமே இது. இதற்காக  காலிங்கராயன்பாளையம், நல்லாகவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் இதற்காக ராட்சத நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தற்போது பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும் அத்திக்கடவு  - அவிநாசி திட்டத்தை  இன்று காலை 10 மணி அளவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.  இந்த நிகழ்வில், காலிங்கராயன்பாளையம் நீரேற்று நிலையத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.