4 புதிய மாநகராட்சிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..

 
stalin

4  புதிய மாநகராட்சிகளை முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 

மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்தப்பட்டு நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் நிர்வாகப்பணிகளை செம்மைபடுத்த  மிகப்பெரிய பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும்,  அதேபோன்று மிகப்பெரிய நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதன் மூலம் அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால், மேம்படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் கிடைக்கப்பெறும்.  4 புதிய மாநகராட்சிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. 

இதன்படி புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.  இதனை ஏற்று புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே. என்.நேரு கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து நான்கு புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 அதன்படியே புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாகவும்,  திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும்,  நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியாகவும்,  காரைக்குடி நகராட்சி மற்றும் 2  பேரூராட்சிகள், 5  ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 4 புதிய மாநகராட்சிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயல்தகத்தில் இருந்தவாறு காணொலி காட்சிகளாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 அதிகரித்துள்ளது.