தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்த இவரது இயர்பெயர் தீர்த்தகிரி. தனது இளம் வாயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் போன்ற போர்க்கலைகளைக் கற்றுத்தேர்ந்து பெரும் வீரராக திகழ்ந்தவர் சின்னமலை. தனது அசாத்திய போர் யுக்திகளை, தனது படைகளுக்கும் கற்றுத்தந்து இந்திய விடுதலைப்போரில் பங்கேற்றவர். ஆங்கிலேயர்களுக்கு பெரும் சவாலானவராக திகழ்ந்த தீரன், அவர்களது கிழக்கிந்திய கம்பெனியை அடியோடு அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.,

அதேபோல் கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் இருந்து வரிவசூல் செய்து, மைசூர் சமஸ்தானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். தங்களது பணம் எதற்காக மைசூருக்கு செல்ல வேண்டும் எனக்கூறி, அப்பணத்தை பிரித்து ஏழை மக்களுக்கு உதவியுள்ளார்.
இந்நிலையில் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.


