தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு- மாநகரம், அறம், ஜெய்பீம் படங்களுக்கு விருது
2016 - 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015 – 2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 – 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை 13.2.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கிச் சிறப்பிக்கிறார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், அதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்ககள் ஆகியோருக்குச் சின்னத்திரை விருதுகளும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் மாணவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்கிட ஆணையிட்டார்கள். அதன்படி 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 183 திரைத்துறையை சார்ந்த விருதாளர்களுக்கும், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த சின்னத்திரை விருதுகள் 101 சின்னத்திரை கலைஞர்களுக்கும், 2008-2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013-2014 ஆம் கல்வியாண்டு வரை வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 30 விருதாளர்களுக்கும் 4.9.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்கின்றது அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோரால் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் 34 விருதாளர்களுக்கும், 2014-2015 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 5 விருதாளர்களுக்கும் 6.3.2024 அன்று சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு சின்னத்திரை விருதுகளுக்கான சிறந்த நெடுந்தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் , சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட சின்னத்திரை விருதுகளும், 2015 -2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 – 2022 ஆம் கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமரர், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய்ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத் திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமாராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானாஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுத்துடன், சிறந்த நடிகர்/நடிகையர் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக
ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுத்துடன், சிறந்த கதாநாயகன்/ கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.


